உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளின் லிஸ்ட்..!

 பொதுவாக மதிய உணவை விட இரவு நேரத்தில் குறைவான அளவு உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும் என்பதால் அதிக புரதம் கொண்ட பருப்பு சூப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்களால் உடல் எடை அதிகரிப்பது என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் பருமனால் மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு, டயட் என பலவற்றை மேற்கொண்டாலும் பலர் தோல்வியைத் தான் சந்திக்கிறார்கள். இதனையடுத்து பலர் இரவில் சாப்பிட்டால் தொப்பை போடும் என்பதால் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள்.

இது முற்றிலும் தவறான ஒன்று. மதிய வேளையில் அதிகமாக சாப்பிட வேண்டும் எனவும் அதே நேரம் இரவில் சாப்பாட்டின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதிக புரதம், குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதால், இரவில் என்னென்ன உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

உடல் எடையைக்குறைக்க உதவும் இரவு நேர உணவுகள்…

பருப்பு சூப் :


பொதுவாக மதிய உணவை விட இரவு நேரத்தில் குறைவான அளவு உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும் என்பதால் அதிக புரதம் கொண்ட பருப்பு சூப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

செய்முறை:

முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுதைச் சேர்ந்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

அடுத்து ஊற வைத்த பருப்பைச்சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குக்கரின் ஸ்டீரிம் அடங்கியதும் தேங்காய் பால் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

காய்கறி கிச்சடி:


முதலில் அரிசியை ஊற வைக்கவும். இதனைத்தொடர்ந்து உங்களுக்கு பிடித்த காய்கறிகளை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் இதனுடன் சேர்க்க வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வதக்கிய பின்னர் இதனுடன் அரிசியைச் சேர்க்க வேண்டும்.

குக்கரில் 3 விசில் வரும் வரை அல்லது 10 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான காய்கறி கிச்சடி ரெடியாகிவிட்டது.

ஓட்ஸ் பொங்கல்:


ஓட்ஸ் பொங்கல் செய்வதற்கு முதலில் குக்கரில் பருப்பை வேக வைக்க வேண்டும். இதனையத்து கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த பருப்பு மற்றும் ஓட்ஸ் சேர்க்க வேண்டும். கஞ்சி போன்ற அடர்த்தியான நிலைத்தன்மைப்பெறும் வரை சமைக்கவும். இப்போது சூடான மற்றும் சத்தான ஓட்ஸ் பொங்கல் ரெடியாகிவிட்டது. இரவில் நீங்கள் இதை சாப்பிடும் போது உடல் எடை குறைப்பிற்கு நல்ல பலனளிக்கிறது.

குயினோவா உப்புமா:


குயினோவா உப்புமா என்ற பெயரே பலருக்கு புதிதாக இருக்கும். நம்முடைய வரகு, சாமை, திணை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் போன்றது தான் இந்த குயினோவா. இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் மற்றும் அதிக புரதம் உள்ளதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.

நாம் எப்போதும் செய்யும் உப்புமா போன்றே இந்த குயினோவா தானியத்தைப் பயன்படுத்தி உப்புமா செய்யலாம். புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் பசியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது.

இதுபோன்று உங்களிடம் உள்ள தானியங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தி இரவு நேரத்திற்கான டின்னர் செய்து சாப்பிடலாம். இதற்கென்று நீங்கள் அதிகம் மெனக்கெட தேவையில்லை. மதிய நேர உணவு மிஞ்சியிருந்தால் அதைப்பயன்படுத்தியும் சில டிஸ்கள் நீங்கள் செய்து சாப்பிடலாம்.








Comments